Home / வலைபதிவு / தேவேந்திரகுல வேளாளர் ஆன்மீக பண்பாட்டு அடையாளம் – 2

தேவேந்திரகுல வேளாளர் ஆன்மீக பண்பாட்டு அடையாளம் – 2

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு கிழக்கே 8 கி.மீ தொலைவில் இருக்கன்குடி உள்ளது. இந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் மிகச் சிறப்பு வாய்ந்தது. தென் தமிழகத்தில் வாழும் மக்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குப் போகாமல் இருக்கமாட்டார்கள். வடக்கே அர்ச்சுனா நதியும் தெற்கே வைப்பாறும் ஒன்றாக கூடும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் தல வரலாறு இரண்டு விதமாகப் பேசப்படுகிறது. இருக்கன்குடியில் ஆதிகுடிகளாக வாழும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சொல்லுவது: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்தராய்ப்பு அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மாரியம்மன் இருக்கன்குடி ஆற்றில் புதைப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்குப் பின்பு ஆற்றில் தண்ணீர் வற்றிய நேரத்தில் இருக்கன்குடி தேவேந்திரகுல கன்னிப் பெண்கள் ஏழு பேர் ஆற்றுப் பகுதிக்குச் சாணம் எடுத்துவரச் சென்றார்கள். தாங்கள் எடுத்து வந்த கூடையை இறக்கி வைத்துச் சாணத்தை எடுத்து கூடையில் போட்டு கூடையை தூக்கிக் செல்ல முற்பட மாரியம்மாள் என்ற தேவேந்திரகுல கன்னிப் பெண் கூடை மட்டும் தூக்கமுடியாமல் பாரமாக இருப்பதைப் பார்த்து மற்றப் பெண்கள் உதவி செய்ய விரும்புகிறார்கள். இந்த நிலையில் மாரியம்மாள் மீது சாமி அருளாகி “நான் இந்த இடத்தில் ஒரு கன்னிப் பெண்ணாக புதையுண்டுள்ளேன். என்னைத் தோண்டி எடுத்து வணங்கினால் இந்த ஊருக்கு எல்லாச் செல்வங்களையும் தந்து, நோய் நொடியிலிருந்து அனைவரையும் பாதுகாப்பேன்” என்றும் அருள் வாக்கு சொல்லிய பிறகு சாமி மலையேறுகிறது. இருக்கன்குடி மாரியம்மன் வந்த கதையை தேவேந்திரகுல மக்கள் இப்படிச் சொல்ல இதே கதை தங்களுக்கு உரியது என்று பணிக்கர் சமூக மக்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.

இருக்கன்குடியைச் சேர்ந்த பால்ராஜ், பணிக்கர்களுக்கு இருக்கன்குடி பூர்வீகமான ஊர் கிடையாது.இவர்கள் நல்லான் செட்டிபட்டியிலிருந்து பூசாரி பணிக்காக அழைத்து வந்து இருக்கன்குடியில் குடியமர்த்தப்பட்டவர்கள் என்றார். பணிக்கர் என்று சொல்லும் இவர்கள் தங்களை “இல்லத்து பிள்ளைமார்” என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திங்கள் 2-வது வெள்ளிகிழமை இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தலைவாசல் முன்பு வேப்பிலைக் கொடியை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே கட்டுவார்கள் .

கடைசி வெள்ளிக்கிழமை ரிஷப (காளை வாகனத்தில் சின்ன மாரியம்ம்மன் கோவில் முன்பு சாமி புறப்பாடு தொடங்கும் முன்பு இருக்கன்குடி குடும்பனார் வீட்டிலிருந்து செண்டா, விருது,குடைமேளத்துடன் அம்மனை அழைத்துச் செல்ல தயாராவார்கள். இதில் அப்பனேரி தேவேந்திரர்கள் நகரா ஒலி எழுப்பி அம்மன் முன்பு செல்வார்கள். மேட்டுப்பட்டி, நத்தத்துப்பட்டி மறவர்கள் அம்மனை தூக்கும் பணி செய்வார்கள். இரண்டு ஊர் மறவர்கள் மாறி மாறி இந்தப் பணியை ஏற்றுச் செயல்படுவார்கள். இதற்கு கோயிலிலிருந்து கூலியாக ரூ.21 கொடுக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

மாரியம்மன் கோயில் முன்பு இருக்கன்குடி, N.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரர்களுக்குத் திருக்கண் மண்டகப்படி மண்டபம் உள்ளது. வேறு எந்தச் சமூகத்திற்கும் கோயில் முன்பு மண்டகப்படி கிடையாது. அம்மன் உலா வரும் பொழுது இந்தத் திருக்கண் முன்பு எழுந்தருளி தேவேந்திரகுல மக்களுக்கு காட்சியளிப்பாள்.

இருக்கன்குடியில் உள்ள 9 குடும்பர்களுக்கு கோயிலிலிருந்து திருவிழா தொடங்கும் முன்பே அழைப்பு கொடுப்பது வழக்கம். இந்த ஒன்பது குடும்பர்கள் வருடத்திற்கு ஒருவராக மாரியம்மன் கோயில் திருவிழாவில் மரியாதை பெறுவார்கள்.

ஒன்பது குடும்பர்கள்:

1.முத்துச்சாமி (ஆசிரியர்) வகையறா
2.பழனிவேல் வகையறா
3.கோபால் வகையறா
4.சக்திவேல் வகையறா
5.இளையராஜா வகையறா
6.சுப்பிரமணியன் வகையறா
7.பெருமாள்சாமி வகையறா
8.பாண்டி வகையறா
9.சின்னத்தம்பி வகையறா

மேற்கண்ட தகவலை இருக்கன்குடிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட பொழுது நாட்டாமை கே.முருகன், S.பவுன்ராஜ் (தலைவர்) மற்றும் உள்ள தேவேந்திரர்கள் சொன்ன தகவலை இங்கு பதிவு செய்துள்ளோம்.

About admin

Check Also

கண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்… இருக்கன்குடி மாரியம்மன்!

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் இருக்கன்குடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *