Breaking News
Home / கால்நடை வளர்ப்பு / நட்டமில்லா வருமானம் கொடுக்கும் நாட்டுக் கோழிகள்…

நட்டமில்லா வருமானம் கொடுக்கும் நாட்டுக் கோழிகள்…

லாபகரமாக விவசாயம் செய்வதற்கு முதலில் வல்லுநர்கள் பரிந்துரைப்பது, கால்நடை வளர்ப்புதான். அவற்றிலும் குறைந்த தண்ணீர் வளம் மட்டுமே உள்ள விவசாயிகளுக்குக் கைகொடுப்பது, கோழி வளர்ப்பு. தற்போது பிராய்லர் கோழிகளை உண்பதால் நேரும் கெடுதல்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால், நாட்டுக்கோழிகளுக்கான மவுசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சந்தை வாய்ப்புப் பிரகாசமாக இருப்பதால், விவசாயிகள் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அத்தகையோரில் ஒருவர்தான், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்.

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் வெண்ணாங்குபட்டுக் கிராமத்தில் உள்ளது தமிழ்ச்செல்வனின் பண்ணை. ஒரு காலை வேளையில் தமிழ்ச் செல்வனின் பண்ணைக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

“அப்பா, தாத்தா எல்லாம் விவசாயம்தான் செஞ்சாங்க. நான் சின்ன வயசுல இருந்தே, அவங்களுக்கு உதவியா இருப்பேன். கல்லூரிப் படிப்பு முடிச்சுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். 1994-ம் வருஷத்துல இருந்து விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன். 2001-ம் வருஷம் கோழி வளர்க்கலாம்னு ஆசைப் பட்டு, ஒரு பண்ணையோட ஒப்பந்தம் செஞ்சு, பிராய்லர் கோழிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். 2012-ம் வருஷம் ஒப்பந்தம் போட்ட பண்ணையோட சில பிரச்னைகள் வந்துடுச்சு. அதனால, பிராய்லர் வளர்ப்பை கைவிட்டுட்டேன்” என்றவர் தொடர்ந்தார்…

விற்பனைக்கு உதவிய பசுமை விகடன்

“2013-ம் வருஷம், நாட்டுக்கோழி வளர்க்கலாம்னு  அசில் ரக நாட்டுக்கோழியில 200 குஞ்சுகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். கோழிகள் வளர்ந்ததும், எப்படி விற்பனை செய்றதுனு தெரியலை. அதனால, ‘பசுமை விகடன்’ல வர்ற ‘பசுமைச் சந்தை’ பகுதிக்கு விவரம் எழுதிப்போட்டேன். அதுல வெளிவந்த ஒரே வாரத்துல, என்கிட்ட இருந்த அத்தனை கோழிகளும் விற்பனையாகிடுச்சு.

அதுக்கடுத்ததா கடக்நாத் ரகக் கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். இது மத்தியப் பிரதேசத்தில் பிரபலமான நாட்டுக்கோழி ரகம். இந்தக் கோழியோட இறக்கையில இருந்து சதை வரைக்கும் கறுப்பு நிறத்துல இருக்கும். அதனால இதைக் ‘கருங்கோழி’னும் சொல்வாங்க” என்ற தமிழ்ச்செல்வன், கோழிக் குஞ்சு வளர்க்கும் அறைக்கு அழைத்துச் சென்று அதைக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

குஞ்சுகளுக்குக் கதகதப்பு

“கோழிக் குஞ்சுகள் பிறந்த 20 நாள்கள் வரை செயற்கையா வெப்பம் கொடுத்து பராமரிக்கணும். தகரத்தை வட்ட வடிவமா வெச்சு 100 வாட்ஸ் பல்புகளைக் கட்டித் தொங்கவிட்டால் போதுமானது. 100 குஞ்சுகளுக்கும் சேர்த்து 100 வாட்ஸ் பல்பு ஒன்றே போதும். குஞ்சுகள் எண்ணிக்கை அதிகமா இருந்தா பல்புகளை அதிகப்படுத்திக்கணும். ராத்திரி நேரத்துல, குளிர் காத்து குஞ்சுகளைத் தாக்காத அளவுக்குச் சுத்தி மறைப்பு இருக்கணும். தரைப்பகுதியில் நிலக்கடலைத் தோலைப் பரப்பிவிட்டால் மெத்தை மாதிரி இருக்கும்.

கோழிகள் அதிகமாகத் தண்ணீர் குடிக்கும். அதனால, கோழிகளுக்குச் சுத்தமான தண்ணீர் எப்பவும் இருக்கிற மாதிரி பாத்துக்கணும். குஞ்சுப்பருவத்துல பொட்டுக்கடலைத்தூள், மக்காச்சோள மாவைத் தீவனமாகக் கொடுக்கலாம். 15 நாள் குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 8 கிராம் வரை தீவனம் கொடுக்கணும். ஒரு மாசக் குஞ்சுகளுக்கு 15 கிராம் வரை தீவனமாகக் கொடுக்கணும்.

20 நாளுக்கு மேல் கொட்டகை

2 அடி உயரம், 30 அடி சுற்றளவுல வட்ட வடிவமா தகரத்தை வெச்சா, அதுல 300 குஞ்சுகள் வரை விடலாம். இப்படி 20 நாள் பராமரிச்சுட்டுப் பிறகு கொட்டகைக்கு மாத்திடணும். கொட்டகை, நல்லா காற்றோட்டமா இருக்கணும். 20 அடி நீளம், 10 அடி அகலம்னு கொட்டகையை அமைக்கலாம். கொட்டகைக்கு நான்கு புறமும் 2 அடி உயரத்துக்குச் சுவர் வெச்சு, அதுக்கு மேல வலையால அடைத்துவிட்டால் போதும். தென்னை ஓலை வெச்சு கூரை அமைச்சா குளுகுளுனு இருக்கும். கொட்டகையோட தரைப்பகுதியில் 2 அங்குல உயரத்துக்கு நிலக்கடலைத் தோலைப் பரப்பிவிடணும். கோழிகள் ஒன்றையொன்று கொத்திக் கொள்ளும்போது காயம் படாம இருக்கிறதுக்காக அலகு நுனியை வெட்டிடணும். 2 மாசத்துல இருந்து குஞ்சுகளை விற்பனை செய்ய ஆரம்பிக்கலாம். 100 நாள்களுக்குப் பிறகு விற்பனை செஞ்சா நல்ல விலை கிடைக்கும்” என்ற தமிழ்ச்செல்வன் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“இப்போ பண்ணையில கடக்நாத் ரகத்துல 150 பெட்டைக்கோழிகள்; 40 சேவல்கள் இருக்கு. அசில் ரகத்துல 25 தாய்க்கோழிகள் இருக்கு. நிகோபாரி ரகத்துல 70 தாய்க்கோழிகள் வளர்ந்துட்டு இருக்கு. நாட்டுக்கோழிகள் வளர்க்கிறப்போ… முட்டை விற்பனை, குஞ்சுகள் விற்பனை, வளர்ந்த கோழி, சேவல் விற்பனைனு மூணு வகையில் வருமானம் பார்க்கலாம்.

எவ்வளவு கோழிகள் இருந்தாலும், கடக்நாத் கோழிகள் அந்த ரகத்துல மட்டும்தான் இணை சேரும். அதனால, எப்பவும் தூய ரகம்தான் உருவாகும்.

கடக்நாத் கோழி முட்டைகளுக்கு அதிகத்தேவை இருக்கு. அதனால அந்த ரக முட்டைகளை மட்டும்தான் விற்பனை செய்றேன். மத்த கோழிங்களோட முட்டைகளைக் குஞ்சு உற்பத்திக்குப் பயன்படுத்திக்கிறேன்.

கடக்நாத் கோழி முட்டைகளை ஒரு முட்டை 40 ரூபாய்னு வருஷத்துக்கு 120 முட்டைகள் விற்பனை செய்றேன். அதுமூலமா 4,800 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஒரு மாசமான குஞ்சுகளை, ஒரு குஞ்சு 175 ரூபாய்னு வருஷத்துக்கு 100 குஞ்சுகளை விற்பனை செய்றேன். அதுமூலமா 17,500 ரூபாய் வருமானம் கிடைக்குது.

வளர்ந்த கோழிகள்ல வருஷத்துக்குச் சராசரியா 40 சேவல்கள், 30 கோழிகள்னு விற்பனை செய்றேன். கோழிகளை கிலோ 700 ரூபாய்னும், சேவல்களைக் கிலோ 400 ரூபாய்னும் விற்பனை செய்றேன். அந்த வகையில் 50,000 ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்குது. மொத்தமாகப் பார்த்தால், வருஷத்துக்கு எப்படியும் 70,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைச்சுடும். அதுல, எல்லா செலவும் போக 50,000 ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்” என்ற தமிழ்ச்செல்வன் நிறைவாக,

“இப்போ வளர்ந்துட்டு இருக்கிற தாய்க்கோழிகள் எல்லாம் முட்டையிட ஆரம்பிச்சுடுச்சுனா வருமானம் அதிகமாயிடும். ஆனா தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்கனு வந்து வளர்ந்த கோழிகளைக் கேக்குறப்போ, தவிர்க்க முடியாம கோழிகளைக் கொடுக்க வேண்டியதாகிடுது. இருந்தும் தாய்க்கோழிகளை அதிகப்படுத்திக் கிட்டேதான் இருக்கிறோம். கோழிகளை, என் மனைவியும் நானுமே பராமரிச்சுக்கிறோம். கோழிகளுக்குக் கீரைகள், காய்கறிக் கழிவுகளையும் உணவாகக் கொடுக்கிறோம். அதனால, தீவனச்செலவு குறையுது” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு: தமிழ்ச்செல்வன்,
செல்போன்: 99525 70212


கோழிகளுக்குக் கை மருத்துவம்

“மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி கோழிகளுக்குக் கொடுத்துட்டு வந்தால், ரத்தக் கழிச்சல் வராது. சின்ன வெங்காயத்தை விளக்கெண்ணெய் சேர்த்து இடிச்சு அப்பப்போ கொடுக்கிறதால நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுது. குஞ்சுகளுக்கு வைக்கிற தண்ணீர்ல வசம்பைக் கலந்துவிட்டாலும் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். குளிர்காலத்தில் தண்ணீர்ல அதிமதுரம் பொடியைக் கலந்து கொடுத்தால் சளிப் பிடிக்காது. குடற்புழு நீக்கத்துக்கு வெள்ளைப்பூசணியைத் தீவனத்தோட கலந்து கொடுத்துடுவோம். அப்பப்போ, பஞ்சகவ்யா கரைசலைக் கொடுக்கிறதால வயிற்றில் இருக்கிற கிருமிகள் அழிஞ்சுடுது” என்கிறார், தமிழ்ச்செல்வன்.

Thanks to Pasumai Vikatan

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *