Breaking News
Home / இயற்கை விவசாயம் / நஞ்சில்லா உணவு… நோயில்லா வாழ்க்கை… மாடித்தோட்டத்தின் மகத்துவம்!

நஞ்சில்லா உணவு… நோயில்லா வாழ்க்கை… மாடித்தோட்டத்தின் மகத்துவம்!

யற்கை உணவு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது என்பதற்கு நேரடிச் சாட்சி, நகரங்களில் பெருகி வரும் வீட்டுத்தோட்டங்கள்தான். தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகளவில் மாடித்தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழிப்பு உணர்வு பெருகி வருவதில் ‘பசுமை விகடன்’ இதழுக்கும் முக்கியப் பங்குண்டு. மாடித்தோட்டம் அமைக்கும் விதம் குறித்துச் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தியிருக்கிறது, பசுமை விகடன். அதோடு, மாடித்தோட்டம் அமைத்துள்ளவர்களின் அனுபவங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது, பசுமை விகடன்.

அந்த வகையில், ஈரோடு காசிபாளையம் பகுதியில் மாடித்தோட்டம் அமைத்துக் கீரை, காய்கறிகள், மூலிகைகள் எனச் சாகுபடி செய்து வரும் வி.சுப்பிரமணியின் அனுபவங்கள் இங்கே இடம்பெறுகின்றன.

“எனக்கு இப்போ 63 வயசு ஆகுது. நான், 33 வருஷம் எல்.ஐ.சி முகவரா இருந்தேன். கிட்டத்தட்ட 15 ஆயிரம் வாடிக்கையாளர்கள் எங்கிட்ட இருந்தாங்க. அதனால, தினமும் பலபேரைச் சந்திக்கிறதுக்கான வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. அப்படி நான் சந்திச்சவங்கள்ல நிறைய பேருக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு இருந்துச்சு. இன்னும் சிலருக்கு புற்றுநோய்கூட இருந்துச்சு. அவங்க சம்பாதிக்கிறதுல பெரும்பகுதி பணத்தை மருத்துவமனைக்குத்தான் கொடுத்துட்டு இருக்கிறாங்க. அதுக்குக் காரணம் மாறுபட்ட உணவு முறைனு நல்லாவே தெரிஞ்சது.

ஒருமுறை மூணு மாசம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா போற வாய்ப்பு கிடைச்சது. அங்கெல்லாம், அடுக்கு மாடிகள், மொட்டை மாடிகள், அலுவலகங்கள்ல எல்லாம் தோட்டம் போட்டிருந்ததைப் பார்த்தேன். ஒரு இடத்துல மாடியில் நெல் விளைஞ்சதைக் கூட பார்த்திருக்கேன். மற்றொரு இடத்துல நிறைய செடிகள் வளர்த்து அங்க,

‘இது ஆயுளைக்கூட்டும் ஆக்ஸிஜன் தொழிற்சாலை’னு எழுதிப் போட்டிருந்தாங்க. வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்துல காற்று மாசு, நீர் மாசு, நஞ்சான உணவு மூணுனாலதான் பல நோய்கள் வருதுனு தெரிஞ்சுகிட்டேன்.

பயணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுமே மாடியில் தோட்டம் போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். தமிழ்நாடு அரசு, தோட்டக்கலைத்துறை மூலமா வீட்டுத் தோட்டம் அமைக்கிறதுக்காக மானிய விலையில உபகரணங்கள், விதைகள், இடுபொருள்கள் கொடுக்கிறதைக் கேள்விப்பட்டு, அதுக்கு விண்ணப்பிச்சேன்.

அவங்க கொடுத்த பைகள், இடுபொருள்கள், விதைகள் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து சின்ன அளவுல தோட்டம் போட்டேன். ஆரம்பத்துல கீரைகள், காய்கறிகளை மட்டும் விதைச்சேன். ரசாயன உரம் கொடுக்காமலேயே ஓரளவு மகசூல் கிடைச்சது. அதைப் பறிச்சு சமைச்சு சாப்பிட்டப்போ ஒரு மனநிறைவு கிடைச்சது. அதுக்கப்புறம்தான் மாடித்தோட்டத்தை விரிவுபடுத்தினேன்” என்ற சுப்பிரமணி, தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

“மொட்டை மாடியில் ஆயிரம் சதுர அடியில் தோட்டம் இருக்கு. அகத்திக்கீரை, அரைக்கீரை, முருங்கை, பச்சைமிளகாய், வாழை, எலுமிச்சை, அவரை, கத்திரி, பிரண்டை, கறிவேப்பிலை, கிரீன் ஆப்பிள், வெண்டை, மா, கொய்யா, கரும்பு, பாகல், சுரைக்காய், தக்காளி, மிளகாய், இஞ்சி, மஞ்சள், வெந்தயம், மணத்தக்காளி, வெற்றிலை, திப்பிலி, திருநீற்றுப்பச்சிலை, கருந்துளசி, சுண்டைக்காய், லெமன் கிராஸ், தூதுவளை, வல்லாரை, நன்னாரி, நோனினு 34 வகையான செடிகளைப் பையில வளர்த்துட்டு இருக்கேன். இங்க வௌஞ்ச கரும்பு, மஞ்சள்,வெற்றிலை வெச்சுதான் போன பொங்கலைக் கொண்டாடினோம்.

எங்கத் தேவைக்குப் போக மீதமுள்ள காய்கறிகளை அக்கம்பக்கம் உள்ளவங்களுக்கு இலவசமாகக் கொடுத்திடுவேன். மூலிகை மருத்துவம் பத்திக் கொஞ்சம் தெரியும்கிறதால, குழந்தைங்க, பெரியவங்களுக்கு ஏற்படுற சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு
இங்க இருக்குற மூலிகைகளையே மருந்தாகக் கொடுக்கிறேன்” என்ற சுப்பிரமணி நிறைவாக,

“ஒரு நாளைக்கு 4 மணிநேரம் மாடித் தோட்டத்துலதான் வேலை செய்றேன். அதுவே எனக்கு உடற்பயிற்சியா இருக்கு. இதனால, சர்க்கரை நோய் கட்டுப்படுது.

மன அழுத்தம் குறையுது. ரத்த அழுத்தம் குறையுது. எல்லாத்துக்கும் மேல விஷமில்லாத காய்கறிகளைச் சாப்பிட முடியுது” என்றார், சந்தோஷமாக.

தொடர்புக்கு,
வி.சுப்பிரமணி,
செல்போன்: 98427 52445


தென்னை நார்க்கழிவில் செடிகள்

மாடித்தோட்டச் செடிகளைப் பராமரிக்கும் முறைகள் குறித்துச் சொன்ன சுப்பிரமணி, “பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயம் நாலுலயும் அரைக்கிலோ எடுத்து ஒண்ணா அரைச்சு சாறாக்கிக்கணும். பூ, பிஞ்சு, காய்னு மூணு பருவத்திலேயும்… ஒரு லிட்டர் தண்ணிக்கு 100 மில்லி சாறுனு கலந்து செடிகள் மேல தெளிச்சு விட்டுடுவேன். வேற எதுவும் செய்றதில்லை. அதனால, பூச்சிகள், நோய்கள் வர்றதில்லை. காய்ச்சலும் பாய்ச்சலுமாத்தான் தெளிப்பு நீர்ப் பாசனம் செய்றேன். நான், முழுக்க முழுக்கத் தென்னை நார்க்கழிவு, உயிர் உரங்கள் இரண்டையும்தான் செடிகளை வளர்க்கப் பயன்படுத்துறேன்.

ஒரு பைக்கு 2 கிலோ தென்னை நார்க் கழிவு தேவைப்படும். ரெண்டு கிலோ தென்னை நார்க்கழிவை தண்ணீர்ல ஊற வெச்சு எடுத்து 15 நாள் நிழல்ல உலர்த்தி, அதோடு 25 கிராம் அசோஸ்பைரில்லம், 25 கிராம் பாஸ்போபாக்டீரியா இரண்டையும் கலந்து, பையில் நிரப்பித் தண்ணீர் தெளிச்சு விதை அல்லது நாற்றை நடவு செஞ்சுடுவேன். மாடியில் 50% நிழல் வலைப்பந்தல் போட்டிருக்கிறதால, சரியான அளவு வெப்பநிலை நிலவுது. பூச்சிகளும் வர்றதில்ல” என்றார்.

thanks to pasumai vikatan

About admin

Check Also

மரம் செய விரும்பு! – 10 – விஷத்தை முறிக்கும் எட்டி!

எல்லா மரங்களும் மனிதர்களுக்கு நன்மைதான் செய்கின்றன. அவற்றில் தீயது என எதுவுமேயில்லை. ஆனாலும், சில மரங்களை நாம் பயன்பாட்டிலிருந்து தள்ளியே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *