Breaking News
Home / இயற்கை விவசாயம் / ஏக்கருக்கு ₹ 50 ஆயிரம் வருமானத்தோடு மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம்!

ஏக்கருக்கு ₹ 50 ஆயிரம் வருமானத்தோடு மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம்!

ல ஆண்டுகளாக ரசாயன உரம் பயன்படுத்தி விவசாயம் செய்த நிலத்தை, இயற்கை விவசாயத்துக்கு மாற்ற பலதானிய விதைப்பு, பசுந்தாள் உரச்செடிகள் விதைப்பு எனப் பல முறைகளைக் கையாண்டு வருகிறார்கள் விவசாயிகள். ஆனால், மக்காச்சோளம் விதைத்து அறுபதே நாள்களில் மண்ணை வளப்படுத்தியதோடு, நல்ல விளைச்சலும் பார்த்திருக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி பிரதாபன்.

கடந்த 10.12.2015-ம் தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில், ‘மணக்கும் ஜீரோ பட்ஜெட் ரோஜா’ என்ற தலைப்பில் வெளியான மகசூல் கட்டுரைமூலம் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான் பிரதாபன். மக்காச்சோள வயலில் வேலைசெய்து கொண்டிருந்த பிரதாபனைச் சந்தித்தோம். “விவசாயக் குடும்பத்துல பிறந்ததால, சின்ன வயசுலிருந்தே விவசாயத்துல ஆர்வம். ‘மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிப்ளோமா’ படிச்சிட்டு, முழு நேர விவசாயியா மாறிட்டேன்.

இது, களிமண்ணும் மணலும் கலந்த ஆற்றுப்படுகை நிலம். ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்தினாத்தான் பயிர் நல்லா விளையும்னு நினைச்சு, ரொம்ப வருஷமா அதைப் பயன்படுத்தித்தான் விவசாயம் செஞ்சோம். பசுமை விகடன்தான் அந்தத் தவறான எண்ணத்தை மாத்தி இயற்கை விவசாயத்துமேல நம்பிக்கை ஏற்படுத்துச்சு.

போன ஏழு வருஷமா அஞ்சு ஏக்கர் நிலத்துல இயற்கை முறையில் ரோஜாவையும் வாழையையும் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கோம். இந்த நாலு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்திருந்தோம். குத்தகைக்காலம் முடிஞ்சதும், இதுலயும் இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சிருக்கோம். இந்த நாலு ஏக்கர் நிலத்துலயும் பல வருஷமா ரசாயனம் போட்டுத்தான் விவசாயம் செஞ்சிட்டிருந்தாங்க. இதுல மூணு ஏக்கர்ல மரவள்ளி போட்டோம். அதிகமான அளவு இயற்கை இடுபொருள்கள் கொடுத்தும், அந்த மூணு ஏக்கர் நிலத்துல மண் வளமாக நீண்ட நாள்கள் பிடிச்சது. ஒரு ஏக்கர் நிலத்துல நாட்டுச்சோளம் சாகுபடி செய்யலாம்னு இருந்தேன்.

 

எங்கேயும் தேடி விதை கிடைக்காததால, ‘பிஸ்கோ-740’ங்கிற வீரியரக மக்காச்சோளத்தை விதைச்சேன். மக்காச்சோளம் விதைச்ச கொஞ்ச நாள்லயே மண் நல்லா வளமா மாற ஆரம்பிச்சது. இ.எம் கரைசல், ஜீவாமிர்தம்னு இயற்கை இடுபொருள்களை அதிகம் கொடுத்தேன்.  இவையெல்லாம் நிலத்துல நல்லா உயிர் மூடாக்கா படர்ந்து, முப்பது நாள்லயே மண்ணு வளமா மாறிடுச்சு. அதனால, இருட்டான, ஈரப்பதமான சூழ்நிலை உருவாகி, அறுபது நள்களுக்குள்ளயே மண்புழுக்கள், நுண்ணுயிர்களெல்லாம் அதிகமா பெருகிடுச்சு” என்ற பிரதாபன், நிலத்தின் மண்ணை அள்ளிக்காட்டியபடியே பேசினார். “மக்காச்சோளப் பயிர் வளர்ச்சியும் அபரிமிதமா இருக்கு. 75 நாள்லயே பத்தடி உயரத்துக்கு வளர்ந்து தண்டு நல்லா திரண்டு, மடலும் அகலமா இருக்கு. 60 நாள்லயே பால் கருது (மக்காச்சோளக் கதிர்கள்) ஒடிக்க ஆரம்பிச்சுட்டேன். கருது நல்லா வாளிப்பா, சுவையாவும் இருந்ததால விற்பனையும் நல்லா இருந்தது.

ஒரு கருது பத்து ரூபாய்னு வெளியூர்கள்ல விற்பனை செஞ்சேன். உள்ளூர்க்காரங்களுக்கு ஒரு கருது மூணு ரூபாய்னு விற்பனை செஞ்சேன். நிறைய விற்பனை வாய்ப்பு இருந்தும் மற்ற வேலைகள் காரணமா, என்னால பால் கருதை ஒடிச்சு விற்பனை செய்ய முடியல. இப்போ கருதுகள் எல்லாம் முத்திடுச்சு.

இரண்டாயிரம் பால் கருதுகள் விற்பனை செஞ்சது மூலமா 9,500 ரூபாய் வருமானம் கிடைச்சது. உழவுல இருந்து இதுவரைக்கும் செஞ்ச செலவுகளுக்கு இதுவே சரியா போயிடுச்சு. அடுத்து அறுவடை செய்ற மக்காச்சோளம் முழுசுமே லாபம்தான்” என்ற பிரதாபன் நிறைவாக,

“இன்னும் ஒன்றரை மாசத்துல முழுசா அறுவடை செஞ்சுடலாம். அறுவடை செஞ்சு, காய வெச்சு, உதிர்த்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன். அப்படிச் செஞ்சா விதைக்காக எடுத்து வெச்சுகிட்டு, மீதியை விற்பனை செய்ய முடியும். இயற்கை முறையில விளைவிக்கிறதால சோளப்பொரி, சோளமாவு தயாரிக்கிறவங்களுக்கு விக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன். அறுவடை செய்றப்போ எப்படியும் 20 குவிண்டால் அளவுக்கு மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். ஒரு குவிண்டாலுக்குக் குறைந்தபட்சமா 2,500 ரூபாய் விலை கிடைச்சாலே 50 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும். ரசாயனத்துல விளையுற மாக்காச்சோளத்துக்கு ஒரு குவிண்டால் 2 ஆயிரம் ரூபாய்க்குள்ளதான் விலைபோகும். நான் இயற்கையில விளைவிக்கிறதால 2,500 ரூபாய்க்கு விக்க முடியுது. அறுவடை முடிஞ்ச பிறகு சோளத்தட்டைகளை அப்படியே அறுத்து வயலில் போட்டு மட்கவிட்டா, அது மண்ணுக்கு ஆக சிறந்த இயற்கை உரமாக இருக்கும். பிறகு, மடக்கி உழுதா மண் வளமாகிடும். அடுத்த போக பயிரில் நல்ல மகசூல் எடுக்கலாம்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
பிரதாபன்,
செல்போன்: 98437 90737


இப்படித்தான் சாகுபடி செய்யணும் 

ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் மக்காச்சோளம் சாகுபடி செய்வது குறித்துப் பிரதாபன் சொல்லிய விஷயங்கள் இங்கே…

தேர்வுசெய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 2 சால் உழவு ஓட்டி, 100 கிலோ கனஜீவாமிர்தம் இட வேண்டும். மீண்டும் இரண்டு சால் உழவு ஓட்டி, இரண்டரை அடி அகலத்தில் பார் அமைக்க வேண்டும். இரு பார்களுக்கு இடையில் விதைக்கு விதை ஓர் அடி இடைவெளி இருக்குமாறு வீரிய ரக மக்காச்சோள விதைகளை விதைக்க வேண்டும். ஒரு ஏக்கரில் நடவுசெய்ய 5 கிலோ வீரியரக விதை தேவைப்படும். விதைத்தவுடன் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தில் 600 மில்லி செறிவூட்டப்பட்ட இ.எம் கரைசலைச் சேர்த்து, பாசன நீரில் கலந்து விட வேண்டும். தொடர்ந்து 3, 7, 13 மற்றும் 15-ம் நாள்களில் பாசன நீருடன் 200 லிட்டர் ஜீவாமிர்தம், 600 மில்லி செறிவூட்டப்பட்ட இ.எம் கரைசல் ஆகியவற்றைக் கலந்து விட வேண்டும்.

விதைத்த 25-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாளுக்குப் பிறகு வாரம் ஒருமுறை பாசன நீருடன் 200 லிட்டர் ஜீவாமிர்தம், 600 மில்லி செறிவூட்டப்பட்ட இ.எம் கரைசல் ஆகியவற்றைக் கலந்து விட வேண்டும்.

32-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து பயிர்கள்மீது தெளிக்க வேண்டும்.  இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து வந்தால், விதைத்த 100 நாள்களுக்குப்பிறகு, கதிர்கள் முற்றத்தொடங்கும். 120-ம் நாளுக்குமேல் அறுவடை செய்யலாம்.


ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை

பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி வளமான நிலத்தின் மண் சேர்த்து கலக்கி, பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாள்கள் வைத்திருக்கவேண்டும்.

பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை வலது புறமாகக் குச்சி வைத்து கலக்கிவிட்டு வந்தால், ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. இந்தப் பயிர் வளர்ச்சி ஊக்கியைப் பாசன நீரிலேயே கலந்துவிடலாம்.


செறிவூட்டப்பட்ட இ.எம் 

ஒரு டிரம்மில் 17 லிட்டர் தண்ணீர் ஊற்றி 2 கிலோ நாட்டுச் சர்க்கரையைக் கலக்க வேண்டும். இதனுடன் ஒரு லிட்டர் இ.எம்-1 கரைசலைக் கலந்து, காற்றுப் புகாதவாறு மூடி, நிழலில் வைக்க வேண்டும். 4-ம் நாள் ஒருமுறை திறந்து மூட வேண்டும். 9-ம் நாள் திறந்து பார்த்தால் வெண்ணிற ஆடை படர்ந்து 20 லிட்டர் செறிவூட்டப்பட்ட திறன்மிகு நுண்ணுயிரி தயாராக இருக்கும். இதை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

About admin

Check Also

உன்னத வருமானம் கொடுக்கும் ஊடுபயிர் கத்திரி

இயற்கை விவசாயிகள் யாராவது அழைத்தால், கூடுமானவரை தவிர்க்காமல் அவர்களது தோட்டத்துக்குச் சென்று கால் பதித்து வருவார், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *