Breaking News
Home / இயற்கை விவசாயம் / ஏக்கருக்கு ரூ.2,50,000… உலர் முருங்கை இலையில் உன்னத வருமானம்! – பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி!

ஏக்கருக்கு ரூ.2,50,000… உலர் முருங்கை இலையில் உன்னத வருமானம்! – பேராசிரியரின் இயற்கைச் சாகுபடி!

காய்கறிச் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை, விலை வீழ்ச்சிதான். சந்தையில் வரத்து அதிகமானால் திடீரென விலை அதலபாதாளத்துக்குப் போய்விடும். அதே நேரத்தில், சில நேரங்களில், எதிர்பார்க்காத அளவுக்கு அதிக விலையும் கிடைக்கும்.

இப்பிரச்னை முருங்கைக்காய் விவசாயிகளுக்கும் அடிக்கடி ஏற்படும். இந்த விலைப் பிரச்னையிலிருந்து தப்பிக்க நினைக்கும் பல விவசாயிகள், முருங்கை விதை விற்பனை, முருங்கை இலை விற்பனை… என இறங்கி நிலையான வருமானம் ஈட்டி வருகிறார்கள். சில விவசாயிகள் இன்னும் ஒருபடி மேலே போய் உலர் முருங்கை இலை, முருங்கை விதை எண்ணெய்… என மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமரசம். இவர் தனது மகன் பிளேட்டோசென் சமரசம் உடன் சேர்ந்து முருங்கைச் சாகுபடி செய்து முருங்கை இலையைக் காய வைத்து விற்பனை செய்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலங்குறிச்சி எனும் கிராமத்தில்தான், சமரசத்தின் தோட்டம் உள்ளது. தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த சமரசம், பிளேட்டோசென் சமரசம் ஆகியோரைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாக வரவேற்றுப் பேசினர்.

“நான் வரலாற்றுத்துறை பேராசிரியர். 34 வருஷம் கல்விப்பணியிலிருந்து கல்லூரி முதல்வரா ரிட்டையர்டு ஆனேன். அப்பா, தாத்தா எல்லோரும் பெரும் விவசாயிகள் தான். நான், பள்ளி, கல்லூரிப் படிப்பு படிக்கும்போதே அப்பாகூடச் சேர்ந்து விவசாய வேலைகளையும் செய்வேன். அதனால, சின்ன வயசுலேயே விவசாய வேலைகள் எனக்கு அத்துபடி. அப்பா காலத்துல நிலக்கடலை, கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய்னு கிணத்துப் பாசனத்துல சாகுபடி செஞ்சோம். அப்போ ரசாயன உரம் பயன்படுத்தித்தான் விவசாயம் செஞ்சோம்.

வேலையில இருக்குறப்பவே ஓய்வுக்குப் பின்னாடி விவசாயம்தான் செய்யணும்னு முடிவு பண்ணி அதுக்கான வேலைகள்ல இறங்குனேன். அப்போவே 10 ஏக்கர் நிலத்துல நெல்லி நடவு செஞ்சேன். அதுல ஓரளவுக்கு லாபம் கிடைச்சுட்டுதான் இருந்தது. ஆனா, போகப்போக மகசூல் குறைய ஆரம்பிச்சது. அப்போ நான் வேலையில இருந்துக்கிட்டே விவசாயம் செஞ்சுட்டு இருந்ததாதால சரியாகக் கவனிக்க முடியலை. ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம் முழுநேர விவசாயியா மாறுன பிறகுதான் என்னென்ன பிரச்னைகள்னு கவனிச்சுப் பார்க்க ஆரம்பிச்சேன். அப்போதான் அதிக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்பாடுதான் மகசூல் குறைவுக்குக் காரணம்னு தெரிஞ்சது. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ரசாயன உரத்தைக் குறைச்சு இயற்கை விவசாயத்துக்கு மாறினேன். அந்தச் சமயத்துல இயற்கை விவசாயம் பத்தின தேடுதல்ல இறங்கினப் போதான் ‘பசுமை விகடன்’ புத்தகம் எனக்கு அறிமுகமாச்சு. தொடர்ந்து அதைப்படிக்க ஆரம்பிச்சேன். நிறைய இயற்கை விவசாயிகளோட தொடர்பு கிடைச்சது. இயற்கை விவசாயத்துல இறங்கினபிறகு மண் நல்ல வளமா மாறிடுச்சு.

அப்புறம் மா, எலுமிச்சைனு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். என்னோட மகன்தான், ‘முருங்கை இலைக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்பு இருக்கு. முருங்கைச் சாகுபடி செஞ்சு இலையைக் காய வெச்சு விற்பனை செஞ்சா நல்ல வருமானம் பார்க்க முடியும்’னு சொன்னார். அதுக்கப்புறம் முருங்கைச் சாகுபடியை ஆரம்பிச்சோம்” என்று தாங்கள் முருங்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்னார், சமரசம்.

தொடர்ந்து பேசிய பிளேட்டோசென் சமரசம்,

“பி.டெக்., எம்.பி.ஏ படிச்சு முடிச்சுட்டுப் பிலிப்பைன்ஸ் நாட்டுல ஓர் அரசு சாரா அமைப்புல இயக்குநரா வேலை செஞ்சுட்டு இருந்தேன். அப்போ விவசாயம், சுற்றுச்சூழல்னு நிறைய புராஜெக்ட் பண்ணிணோம். அதுல ஒண்ணுதான், முருங்கை விவசாயம். அதுக்கான வேலைகளைச் செய்றப்போ வெளிநாடுகள்ல முருங்கை இலைக்கு அதிகத் தேவை இருக்குறது தெரிய வந்துச்சு. அப்புறம் இந்தியா திரும்பி, உதவிப்பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்துட்டேன். அந்த நேரத்தில்தான் அப்பாவும் ஓய்வுபெற்றார்.

அப்பாகிட்ட முருங்கைச் சாகுபடி பத்தி சொன்னதும் ஒத்துக்கிட்டார். அப்புறம் தேனி, ஆண்டிப்பட்டி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், ஈரோடுனு நிறைய ஊர்களுக்குப் போய், முருங்கை விவசாயிகளைப் பார்த்துப் பேசினோம். அப்போ இலை அறுவடைக்குச் செடிமுருங்கைதான் தோதா இருக்கும்னு தெரிஞ்சது. அதுக்கப்புறம்தான் செடிமுருங்கைச் சாகுபடியில இறங்கினோம்” என்ற பிளேட்டோசென் சமரசம், தோட்டத்துக்குள் அழைத்துச் சென்று காட்டிக்கொண்டே பேசினார்.

“இது மொத்தம் 40 ஏக்கர் நிலம். நல்ல செம்மண். 10 ஏக்கர் நிலத்துல நெல்லி காய்ப்பில் இருக்கு. 5 ஏக்கர் நிலத்துல நாட்டுரக எலுமிச்சை இருக்கு. 15 ஏக்கர் நிலத்துல மல்கோவா, நீலம், செந்தூரம், கிளிமூக்கு ரகங்கள்ல மா இருக்கு. 5 ஏக்கர் நிலத்துல செடி முருங்கை அறுவடை முடிஞ்ச நிலையில் இருக்கு. 2 ஏக்கர்ல நிலத்துல முருங்கையை விதைக்காக விட்டுருக்கோம். மீதி 3 ஏக்கர் நிலத்தை முருங்கைச் சாகுபடிக்காகத் தயார் செஞ்சு வெச்சுருக்கோம். இப்போ முருங்கை இலையைப் பறிச்சுக் காய வெச்சு விற்பனை செஞ்சுட்டுருக்கோம்.

எங்ககிட்ட வாங்கி ஏற்றுமதி செய்றாங்க. ஜெர்மனி நாட்டுக்குத்தான் அதிகளவு முருங்கை இலை போகுது. 20 கிலோ அளவுல சாக்குப்பையில அடைச்சு விற்பனைக்கு அனுப்பிட்டுருக்கோம்” என்ற பிளேட்டோசென் சமரசம் நிறைவாக வருமானம் குறித்துச் சொன்னார்.

“45 நாளுக்கு ஒருமுறை இலை அறுவடை செய்யலாம். மழைக்காலங்கள்ல அறுவடை செய்யமாட்டோம். அந்த வகையில வருஷத்துக்குச் சராசரியா 5 தடவை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கர் பரப்புல இருக்குற செடிமுருங்கையில ஓர் அறுப்புக்கு 4,000 கிலோவுல இருந்து 4,500 கிலோ வரை முருங்கை இலை கிடைக்குது. 1,000 கிலோ இலையைக் காயவெச்சா 100 கிலோ உலர்ந்த இலை கிடைக்கும். அந்த வகையில வருஷத்துக்கு 2,000 கிலோ அளவுக்கு உலர்ந்த இலை கிடைச்சுட்டுருக்கு. ஒரு கிலோ உலர்ந்த இலைக்கு, 120 ரூபாய்ல இருந்து 140 ரூபாய் வரை விலை கிடைக்குது. 130 ரூபாய்னே வெச்சுக்கிட்டாலும் ஒரு வருஷத்துல ஒரு ஏக்கர்ல சராசரியா 2,50,000 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைச்சுடும்.

அதுல இடுபொருள், பராமரிப்பு, அறுவடை, போக்குவரத்துனு எல்லாம் சேர்த்து 85,000 ரூபாய் செலவாகிடும். செலவு போக ஒரு ஏக்கர் நிலத்துல, சராசரியா 1,50,000 ரூபாய்க்கு மேல லாபமா நிக்கும். ஒருமுறை நடவு செஞ்சா அஞ்சு வருஷம் வரை வருமானம் பார்க்கலாம்” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார், பிளேட்டோசென் சமரசம்.

தொடர்புக்கு

பிளேட்டோசென் சமரசம், செல்போன்: 95661 01102.
சமரசம்,
செல்போன்: 94437 35902.

– இ.கார்த்திகேயன்,  படங்கள்: எல்.ராஜேந்திரன்


இப்படித்தான் சாகுபடி செய்யணும்! 

ஒரு ஏக்கர் நிலத்தில் செடிமுருங்கைச் சாகுபடி செய்வது குறித்துப் பிளேட்டோசென் சமரசம் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே…

செடி முருங்கைச் சாகுபடிக்குச் செம்மண் நிலம் ஏற்றது. அனைத்துப் பட்டங்களிலும் இதை விதைக்கலாம். பொதுவாக, செடி முருங்கையை மழைக்குப் பிறகு விதைப்பது நல்லது. தேர்வு செய்யப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது ஒருவாரம் காயவிட்டு, மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு ஒருவாரம் கழித்து 4 டன் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி உழுது, ஒருவாரம் காயவிட்டு மீண்டும் ஓர் உழவு செய்ய வேண்டும். அதன்பிறகு சொட்டுநீர்ப் பாசன அமைப்புகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு ஏக்கர் நிலத்தில் விதைப்புக்குத் தேவையான 7 கிலோ பி.கே.எம்-1 ரகச் செடிமுருங்கை விதையுடன் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி தூளைக் கலந்து, ஓர் இரவு முழுவதும் வைத்து எடுத்து விதைக்க வேண்டும். 40 சென்டிமீட்டர் இடைவெளியில் ஓர் அங்குல ஆழத்துக்குப் பள்ளம் பறித்து, ஒரு பள்ளத்துக்கு ஒரு விதை என விதைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சினால் போதும். விதைத்த 8-ம் நாளுக்கு மேல் விதைகள் முளைப்பெடுக்கும்.

விதைத்த 30-ம் நாளில் 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் பயோ என்.பி.கே திரவத்தைக் கலந்து சொட்டுநீர் மூலமாகக் கொடுக்க வேண்டும். 60-ம் நாளுக்குமேல், செடிகளின் நுனிப்பகுதியை இரண்டரை அங்குல அளவுக்கு வெட்டிவிட வேண்டும். இதனால், செடியில் அதிகமாகக் கிளைகள் வரும். 90-ம் நாளுக்குமேல் முதல் அறுவடையை ஆரம்பிக்கலாம். தொடர்ந்து 45 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். மழைக்காலத்தில் அறுவடை செய்யக்கூடாது. ஒவ்வொரு அறுவடை முடிந்த பிறகும் களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு அறுவடை முடிந்தவுடனும்… 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் பயோ என்.பி.கே திரவம், 50 கிராம் கடல்பாசிப் பொடி, 50 கிராம் ஹியூமிக் அமிலப்பொடி ஆகியவற்றைக் கலந்து சொட்டுநீர் மூலம் செடிகளுக்குக் கொடுக்க வேண்டும். மழைக்காலத்தில் இலைகளைக் கடிக்கும் பூச்சிகள் தாக்க வாய்ப்பு இருப்பதால், மழை பெய்து முடிந்தவுடன்… 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேப்பெண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஈர்க்காக அறுவடை செய்து களத்தில் காய வைக்க வேண்டும். நல்ல வெயில் அடித்தால் ஒரேநாளில் காய்ந்துவிடும். மறுநாள் காம்பிலிருந்து இலைகள் உதிரும். அவற்றைச் சாக்குப்பையில் சேகரித்து, வெயில்படாமல் சேமித்து வைக்க வேண்டும்.

About admin

Check Also

உன்னத வருமானம் கொடுக்கும் ஊடுபயிர் கத்திரி

இயற்கை விவசாயிகள் யாராவது அழைத்தால், கூடுமானவரை தவிர்க்காமல் அவர்களது தோட்டத்துக்குச் சென்று கால் பதித்து வருவார், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *