Breaking News
Home / சோளம் சாகுபடி / வறட்சியிலும் செழித்த பாரம்பர்ய சோளம்!

வறட்சியிலும் செழித்த பாரம்பர்ய சோளம்!

மானாவாரி வேளாண்மை செய்யும் பெரும்பாலான விவசாயிகள் தேர்வு செய்யும் பயிர், சிறுதானியங்கள்தான். அவைதான் வறட்சியைத் தாக்குப்பிடித்து வளரக்கூடியவையாக இருக்கின்றன. அந்த வகையில், பாரம்பர்ய ரகமான ‘மாப்பிள்ளை மினுக்கி’ என்ற சோளத்தைச் சாகுபடி செய்து கடுமையான வறட்சியிலும் கணிசமான மகசூலை எடுத்திருக்கிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி அய்யனார்.

விருதுநகர்-சிவகாசி சாலையில் 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, காரிசேரி எனும் கிராமம். இங்குதான் அய்யனாரின் நிலம் இருக்கிறது. தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த அய்யனாரைச் சந்தித்தோம்.

“விவசாயம்தான் பரம்பரைத் தொழில். மூணாவதுக்கு மேல நான் படிக்கலை. அப்போதிருந்தே அப்பாகூட சேர்ந்து விவசாயம் செய்ய ஆரம்பிச்சிட்டேன். அப்பா காலத்துல தொழுவுரம் மட்டும்தான் போட்டோம். இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எல்லாரும் அதிகமா ரசாயன உரம் பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. அப்போ நானும் அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு ரசாயன உரம் போட ஆரம்பிச்சேன். அப்போ வாழைச் சாகுபடி இருந்துச்சு. உரக்கடைக்காரர் சொல்ற உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் இஷ்டம்போல போட்டேன்.  முதல் நாலு வருஷம் நல்ல மகசூல் கிடைச்சது. அப்புறம், படிப்படியாகக் குறைய ஆரம்பிச்சுடுச்சு. ஆனாலும், வேற வேற உரம், பூச்சிக்கொல்லினு கொடுக்க ஆரம்பிச்சேன். அப்படியே போயிட்டுருந்தப்போ தான் கருப்பசாமிங்கிறவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைச்சது.

அவர், வானகம் மையத்துல இயற்கை விவசாய பயிற்சி எடுத்தவர். அவர்தான் ரசாயன பூச்சிக்கொல்லிகளால வர்ற தீமைகளையும் இயற்கை விவசாயத்தோட நன்மைகளையும் எடுத்துச் சொன்னார். இயற்கை முறையில் வாழைச் சாகுபடி செய்ற சில இயற்கை விவசாயிகளையும் அவரே அறிமுகப்படுத்தினார். அந்த விவசாயிகள்கிட்ட பேசின பிறகுதான் நான் இயற்கைக்கு மாறினேன். அப்புறம், அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், மீன் அமினோ அமிலம்னு கொடுக்க ஆரம்பிச்ச பிறகு வாழைக்காய்கள் நல்ல திரட்சியா, பளபளப்பா கிடைச்சது. அதுவரை என் தோட்டத்துல அந்த மாதிரி காய்களைப் பார்த்ததில்லை. அதிலிருந்து, இப்போ வரைக்கும் இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன்” என்று இயற்கை விவசாயத்துக்கு மாறிய கதை சொன்ன அய்யனார், தனது மானாவாரி சாகுபடி குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“முன்னாடி வாழைக்கெல்லாம் ரசாயனம் கொடுத்தாலும், மானாவாரியா செய்ற வெள்ளாமைக்கு ரசாயன உரத்தைப் போட்டதில்லை. ஆட்டுக்கிடை போட்டு உழுது விட்டு மழை கிடைச்சதும் விதைச்சு விடுவேன். அடுத்து அறுவடைதான். ‘மாப்பிள்ளை மினுக்கி’ன்றது பாரம்பர்ய நாட்டு ரகச் சோளம். ஒவ்வொரு வருஷமும் இதைச் சாகுபடி செஞ்சுடுவேன். இது, பார்க்கிறதுக்கு இருங்குச்சோளம் மாதிரியே இருக்கும். இருங்குச் சோளத்துல மணிகள் சிவப்பு நிறத்துல இருக்கும். மாப்பிள்ளை மினுக்கியில் சிவப்பும் வெள்ளையும் கலந்து இருக்கும். அரிசியில் மாப்பிள்ளைச் சம்பா மாதிரி சோளத்துல இது. கஞ்சி, தோசை, இடியாப்பம், முறுக்கு, பனியாரம்னு சமைச்சுச் சாப்பிடலாம்.

என்கிட்ட இருக்கிற 3 ஏக்கர் கரிசல் நிலத்துல கிணற்றுப் பாசனத்தில் 1 ஏக்கரில் நாடன் ரக வாழைக்கன்று நடவு செஞ்சிருக்கேன். நடவு செஞ்சு ரெண்டு மாசம் ஆகுது. அரை ஏக்கர் நிலத்தை நிலக்கடலை நடவுக்காகத் தயார் செஞ்சு வெச்சிருக்கேன். ஒன்றரை ஏக்கர் மானாவாரி நிலத்துலதான் மாப்பிள்ளை மினுக்கி சோளத்தைச் சாகுபடி செஞ்சிருக்கேன். சித்திரை மாசம் கோடை உழவு செஞ்சு நிலத்தைக் காய விட்டுட்டேன். ஆனி மாசத்துல மூணு நாள் செம்மறியாட்டுக் கிடை அடைச்சேன். அப்புறம் ஓர் உழவு ஓட்டிக்காய விட்டுட்டேன்.

வழக்கமா மாப்பிள்ளை மினுக்கி ரகச் சோளத்தை ஆடிப்பட்டத்துலதான் விதைக்கணும். ஆனா, போன ஆடியில் மழை கிடைக்கலை. அதனால அப்படியே நிலத்தை விட்டுட்டேன். ஐப்பசியில் மழை கிடைச்ச பிறகு, ஓர் உழவு ஓட்டி விதைச்சு விட்டுட்டேன். ஒன்றரை ஏக்கர் நிலத்துல 4 கிலோ சோள விதையோட சேர்த்து 4 கிலோ நாட்டுக் கொத்தமல்லி விதையையும் தூவி விட்டேன். ஆனா, சரியா மழை கிடைக்காததால, கொத்தமல்லி முளைக்கலை. சோளமே பத்து நாள் கழிச்சுதான் முளைச்சு வந்துச்சு.

விதைச்ச 41, 56-ம் நாள்கள்ல ஒரு மழை கிடைச்சது. அதுல வளர்ந்து வந்ததுதான் இது. இடையில எந்தப் பராமரிப்பும் செய்யலை. ஆடிப்பட்டத்துல மழை கிடைச்சு விதைச்சிருந்திருக்கணும். அதோட நாலஞ்சு மழை கிடைச்சிருந்தா மகசூல் அதிகமாகக் கிடைச்சிருக்கும்” என்ற அய்யனார், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“சுத்துப்பட்டு விவசாயிகள் கொஞ்ச பேர் மக்காச்சோளம் போட்டிருந்தாங்க. மழை இல்லாமப் போனதால் எல்லாம் அடியாயிடுச்சு. ஆனா, இருங்குச்சோளம் போட்டிருந்தவங்களுக்கு ஓரளவு மகசூல் கிடைச்சுடுச்சு. ரெண்டு மூணு மழை கிடைச்சிருந்தா ஒன்றரை ஏக்கர் நிலத்துல கிட்டத்தட்ட 600 கிலோ வரை மாப்பிள்ளை மினுக்கி சோளம் மகசூலாகியிருக்கும்.

ஆனா, மழை தப்பிட்டதால, 230 கிலோதான் அறுவடையாச்சு. எனக்குத் தெரிஞ்ச வரையில இருங்குச்சோளத்தைத்தான் விவசாயிகள் நிறைய பேர் சாகுபடி செய்யுறாங்க. ஆனா, இந்த மாப்பிள்ளை மினுக்கி சோளத்தை யாரும் விதைச்ச மாதிரி தெரியலை. அதனால, பக்கத்து விவசாயிகளுக்கு இந்த விதையைக் கொடுத்து பெருக்கலாம்னு இருக்கேன்.

வீட்டுத்தேவைக்கும், அடுத்த போக விதைப்புக்கும் சேர்த்து 50 கிலோ எடுத்து வெச்சுக்கிட்டு, மீதி 180 கிலோ சோளத்தையும் விதைக்காகவே விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இதுவரை 55 கிலோவை விதைக்காக கிலோ 65 ரூபாய்னு விற்பனை செஞ்சுட்டேன். 180 கிலோ சோளத்தையும் விற்பனை செஞ்சா 11 ஆயிரத்து 700 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். அதுல எல்லா  செலவும் போக, 7,640 ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்” என்ற அய்யனார்,

“விதைச்சு ஒண்ணுமே இல்லைனு கைய விரிச்சுட்டு வருத்தப்பட்டு நிக்கிறதுக்கு, ஏதோ மகசூல் எடுத்தோம்னு நினைக்குறதுதான் நல்லது. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்று சிரித்தபடி சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு: அய்யனார், செல்போன்: 95144 24959

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *