Breaking News
Home / இயற்கை விவசாயம் / வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி…

வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி…

*150 நாள் வயது

*எல்லா மண்ணுக்கும் ஏற்றது

*ஆடிப்பட்டம், மாசிப்பட்டம் சிறந்தது

*ஏக்கருக்கு 30 கிலோ விதை

*அரிசியாக விற்றால் கூடுதல் லாபம்

ஞ்சில்லா உணவு உற்பத்தி என்பதோடு எளிமையான பராமரிப்பு மற்றும் குறைவான செலவில் நிறைவான லாபம் என்பதுதான் இயற்கை விவசாயத்தை நோக்கி பலரையும் திருப்பி வருகிறது.

இதில் வீரிய ரக பயிர்களையும் சிறப்பாக சாகுபடி செய்யமுடியும் என்றாலும், பெரும்பாலான இயற்கை விவசாயிகள் பாரம்பர்ய ரகங்களைத்தான் சாகுபடி செய்கிறார்கள். அதிலும் சில குறிப்பிட்ட பாரம்பர்ய நெல் ரகங்களுக்கு சிறப்பான சந்தை வாய்ப்பு இருப்பதால், பலரும் அவற்றைத் தொடர்ந்து சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாகரன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகா, கூமாப்பட்டியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சா.கொடிக்குளம் கிராமத்தில்தான் கருணாகரனின் நெல் வயல் உள்ளது. காலைவேளையில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த கருணாகரனைச் சந்தித்தோம்.

இயற்கைக்கு மாறினேன்!

“தாத்தா, அப்பா காலத்துல இருந்தே விவசாயம்தான் செய்றோம். அவங்க நெல், கரும்பு, தென்னைனு ரசாயன முறையில செஞ்சுட்டு இருந்தாங்க. நானும் பி.ஏ முடிச்சுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செய்தேன். ‘உழவு செய்யறப்பவே உரத்தைக் கொட்டிடணும். பூச்சியைப் பார்த்தா பூச்சிக்கொல்லி அடிக்கணும்’ இதுதான் நான் விவசாயத்துக்கு வரும்போது, எனக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். அப்போ, இயற்கை விவசாயம் பத்தியெல்லாம் எதுவுமே தெரியாது.

பசுமை அறிமுகம்!

2009-ம் வருஷ ஆரம்பத்துலதான் எனக்கு ‘பசுமைவிகடன்’ அறிமுகம். என்னோட மாமா, ‘பசுமை விகடன்’ வாசகர். அவர் படிக்கிறதோட சரி. ஆனா, ரசாயன விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருந்தார். அவர் வீட்லதான் முதன்முதலா பசுமை விகடனைப் படிச்சேன். மகசூல் சம்பந்தமான கட்டுரைகள்ல உழவுல இருந்து அறுவடை வரை தெளிவா எழுதியிருக்கிறதைப் படிச்சதும் எனக்கு அப்பவே இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. அதுல இருந்து தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். பசுமை விகடன் மூலமா பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் வகுப்புல கலந்துகிட்டேன்.

ஜீரோபட்ஜெட் பயிற்சி

வகுப்பு முடிஞ்சு வந்ததுமே இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். அந்த வருஷம் (2009) மாசிப் பட்டத்துல டீலக்ஸ் பொன்னி ரகத்தை 2 ஏக்கர் நிலத்துல போட்டேன். ரசாயன உரம் போட்டு வளர்ந்த நெல் கதிருக்கும், இயற்கை விவசாய முறையில் வளர்ந்த கதிருக்கும், வளரும்போதே நல்ல வித்தியாசம் தெரிஞ்சது. எனக்கு முதல் முறையிலேயே கணிசமான மகசூலும் கிடைச்சுது. ஆனா, களைகளைத்தான் கட்டுப்படுத்த முடியலை.

கற்றுக்கொடுத்த நம்மாழ்வார் 2010-ம் வருசம் வத்திராயிருப்பு பக்கத்துல நம்மாழ்வார் அய்யாவோட ஒரு இயற்கை விவசாயப் பயிற்சியில கலந்துகிட்டேன். அப்போ, நம்மாழ்வார்கிட்ட களை பிரச்னை பத்தி சொன்னேன். அவர்தான், ‘ஒட்டு ரக நெல்லை சாகுபடி செஞ்சா களை அதிகம் வரத்தான் செய்யும். பாரம்பர்ய ரக நெல்லை சாகுபடி பண்ணுங்க, களை வராது’னு சொன்னார். உடனே, பாரம்பர்ய ரகமான வெள்ளைப் பொன்னியை சாகுபடி செஞ்சு பார்த்தேன். அப்படியே மாப்பிளைச்சம்பா, சிவப்புக் கவுனி, கறுப்புக் கவுனி, சேலம் சன்னானு நிறைய ரகங்களை சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்” இயற்கை விவசாயத்துக்கு மாறிய கதையைச் சொல்லி சற்றே இடைவெளி கொடுத்த கருணாகரன், தொடர்ந்தார்.

“மொத்தம் 17 ஏக்கர் நிலம் இருக்கு. முழுக்கவே வண்டல் மண் நிலம்தான். இதில் 7 ஏக்கர் நிலத்துல மாசிப் பட்டத்துல வெள்ளைப் பொன்னி போட்டு இப்போ அறுவடை செஞ்சுட்டேன். ஒரு ஏக்கர் நிலத்துல வீட்டுத்தேவைக்கு உளுந்து, பாசி, துவரை போட்டிருக்கேன். மீதி 9 ஏக்கர் நிலத்தை உழுது தயார் செஞ்சு வச்சிருக்கேன்.

50 சென்ட் பரப்புக்கு ஒரு உரக்குழி!

ஒவ்வொரு 50 சென்ட் நிலத்துக்கு இடையிலயும் தண்ணீர் திறக்கிற மடைப்பகுதியில் 2 அடி சதுரம் 2 அடி ஆழத்துல உரக்குழி வெட்டியிருக்கேன். பக்கத்துலேயே ஜீவாமிர்தம் தயாரிக்கிற டிரம்மும் வெச்சிருக்கேன். அதனால ஜீவாமிர்தத்தைத் தூக்கிக்கிட்டு அலையுற வேலை கிடையாது. ஜீவாமிர்தத்தை உரக்குழிக்குள்ள விட்டுட்டா தண்ணீரோட கலந்து நிலத்துக்குப் போயிடும். இந்த உரக்குழிக்குள்ள 10 கிலோ எருக்கு இலையையும் 20 கிலோ நாட்டுப் பசு  மாட்டுச்சாணத்தையும் போட்டு விட்டுட்டா நாலு நாள்ல நல்லா அழுகி மட்கிடும். உரக்குழிக்குள்ள பாசனத்தண்ணி விழுந்து பாயுறப்போ இதுவும் நிலத்துக்குப் போயிடும்” என்று சொன்ன கருணாகரன், நிறைவாக வெள்ளைப் பொன்னி மூலம் தான் எதிர்பார்க்கும் வருமானம் குறித்துச் சொன்னார்.

7 ஏக்கரில் 168 மூட்டை!

“ஏழு ஏக்கர்லயும் சேர்த்து 168 மூட்டை (72 கிலோ மூட்டை) மகசூல் ஆயிருக்கு. மொத்தம் 12,096 கிலோ நெல் கிடைக்கும். இதை அரிசியா அரைக்கிறப்போ 7,056 கிலோ அரிசி கிடைக்கும். வெள்ளைப் பொன்னி அரிசி கிலோ 65 ரூபாய்னு விற்பனையாகுது. அந்தக் கணக்குல 7,056 கிலோ அரிசியை விற்பனை செய்தா 4 லட்சத்து 58 ஆயிரத்து 640 ரூபாய் வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். இதுல விதைப்புல இருந்து அரிசி அரவை வரை 7 ஏக்கருக்கும் சேர்த்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவு போக, 3 லட்சத்து 28 ஆயிரத்து 640 ரூபாய் லாபமா நிக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

போன போகத்துல விளைஞ்ச நெல்லை புழுங்கல் அரிசியாக்கி இயற்கை அங்காடிகள், உறவினர்களின் கடைகள்னு விற்பனை செஞ்சேன். அதனால, விற்பனைக்கு பிரச்னை இல்லை. அதோட, விற்பனை அனுபவம் எனக்கு இருக்கிறதால நான் எதிர்பார்க்கிற லாபம் கண்டிப்பா கிடைச்சுடும்” என்று நம்பிக்கையுடன் சொன்ன கருணாகரன், தனது வேலைகளைத் தொடர்ந்தார்.

தொடர்புக்கு,
கருணாகரன்,
செல்போன்: 90472-73009.


சந்தை நிலவரம் தெரிந்தால், விற்பனைக்குக் கவலையில்லை!

“நான் டீலக்ஸ் பொன்னி சாகுபடி செய்றப்பவும் அரிசியா அரைச்சுதான் விற்பனை செய்துகிட்டு இருந்தேன். அதேமாதிரி முதன்முதலா 3 ஏக்கர் நிலத்துல போட்டிருந்த வெள்ளைப் பொன்னியையும் அரிசியா அரைச்சுதான் விற்பனை செய்தேன். அதை சாப்பிட்டவங்க, ‘சோறு மல்லிகைப் பூ மாதிரி இருக்கு’னு சொல்லி திரும்ப திரும்ப கேட்க ஆரம்பிச்சாங்க. அதனாலதான், அடுத்து 5 ஏக்கர், இப்போ 7 ஏக்கர்னு சாகுபடிப் பரப்பை அதிகரிச்சிட்டேன். சுத்து வட்டாரத்துல இந்த ரகத்தை யாரும் சாகுபடி செய்றதில்லை. அதுவும் எனக்கு வசதியாகிடுச்சு. சந்தையில தேவை இருக்கிற ரகத்தைத் தெரிஞ்சு சாகுபடி செஞ்சா… விற்பனைக்குக் கவலையேயில்லை. பச்சரிசியானாலும் புழுங்கல் அரிசியானாலும் இந்த ரகம் நிறம் மங்காது. வெண்மையாவே இருக்கும். இந்த வைக்கோல், பஞ்சு மாதிரி இருக்கிறதால மாடுகள் விரும்பிச் சாப்பிடும்” என்கிறார், கருணாகரன்


இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளைப் பொன்னி ரக நெல்லை சாகுபடி செய்வது குறித்து, கருணாகரன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே..!

மண்ணை வளமாக்க தக்கைப்பூண்டு..!

மண்வளம் குறைந்த நிலத்திலும் பாரம்பர்ய ரக நெல் வகைகள் வளரும் தன்மை கொண்டவை. வெள்ளைப் பொன்னிக்கு ஆடிப் பட்டமும், மாசிப் பட்டமும் ஏற்றவை. இதன் வயது 135 முதல் 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி மூன்று நாட்கள் காயவிட்டு… 15 கிலோ தக்கைப்பூண்டு விதையை விதைத்து, ஒரு சால் உழவு ஓட்டி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து பாசனம் செய்தால், 45-ம் நாளுக்கு மேல் பூவெடுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் செடியோடு அப்படியே மடக்கி உழவு செய்ய வேண்டும். இது தேவையான தழைச்சத்தைக் கொடுத்து மண்ணை வளப்படுத்தும்.

விதைநேர்த்திக்கு பீஜாமிர்தம்!

ஒரு ஏக்கர் நடவுக்கு 4 சென்ட் பரப்பில் நாற்றங்கால் தேவை. 30 கிலோ விதைநெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு 20 லிட்டர் பீஜாமிர்தத்தை ஊற்றி, நெல்மணிகள் மூழ்கும்படி வைக்க வேண்டும். 24 மணி நேரம் இப்படி வைத்த பிறகு நெல்லை ஒரு சணல் சாக்கினுள் கொட்டி, ஓர் இரவு முழுவதும் இருட்டில் வைத்தால், விதைகள் முளைவிடும். பிறகு விதைகளை சணல் சாக்கின் மீது கொட்டி பரப்பி அரை மணி நேரம் உலரவிட்டு நாற்றங்காலில் விதைக்க வேண்டும். விதைத்த 5 மற்றும் 12-ம் நாட்களில் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசனத் தண்ணீருடன் கலந்துவிட வேண்டும். 25-ம் நாளுக்கு மேல் நாற்றுப் பறித்து நடவுசெய்யலாம்.

ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம்!

வயலில் நாற்று நடவுக்கு முன் தினம் ஒரு சால் உழவு செய்து வைக்கவேண்டும். நாற்று நடவு செய்த அன்றே பாசனத் தண்ணீருடன் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும். தொடர்ந்து நிலத்தின் தேவையைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

நடவு செய்த 15, 30, 45, 60, 75, 90 மற்றும் 115-ம் நாட்களில்  200 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசனத்தண்ணீரில் கலந்து விட வேண்டும். 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 70-ம் நாளுக்கு மேல், 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வேப்பிலை கஷாயம் என்ற கணக்கில் கலந்து, கைத் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இது பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.  80-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து தெளிக்கவேண்டும்.

85-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மோர்க்கரைசல் கலந்து தெளிக்கவேண்டும். 95-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்கவேண்டும். 130 நாளுக்கு மேல் கதிர் முற்றத் தொடங்கும். பிறகு நிலத்தை காயவிட்டு அறுவடை செய்யலாம்.


வேப்பிலை கஷாயம்!

ஒரு பாத்திரத்தில் வேப்பிலை 5 கிலோ, நாட்டுப் பசுமாட்டுச் சாணம் 2 கிலோ, நாட்டுப் பசு மாட்டுச் சிறுநீர் 5 லிட்டர், 20 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை ஊற்றவேண்டும். இக்கரைசலை காலையிலும் மாலையிலும் நன்கு கலக்கி வந்தால், இரண்டு நாட்களில் வேப்பிலை கஷாயம் தயார்.


மீன் அமினோ அமிலம்!

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் 5 கிலோ மீன் கழிவு, 5 கிலோ தூளாக்காத நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை இட்டு, காற்று புகாதவாறு மூடி 45 நாட்கள் நிழலில் வைத்தால், மீன் அமினோ அமிலம் தயார்.


மோர்க்கரைசல்!

5 லிட்டர் நன்கு புளித்த மோரை, 100 லிட்டர் தண்ணீரில் விட்டு பத்து நிமிடங்கள் நன்கு கலக்கினால், மோர்க்கரைசல் தயார்.


பீஜாமிர்தம்!

நாட்டு பசுமாட்டுச் சாணம் 2 கிலோ, நாட்டு பசுமாட்டுச் சிறுநீர்  5 லிட்டர், சுண்ணாம்பு 10 கிராம், தண்ணீர் 20 லிட்டர்  ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து இரவு முழுவதும் வைத்திருந்தால், காலையில் பீஜாமிர்தம் தயாராகிவிடும்.


ஜீவாமிர்தம்!

நாட்டுப் பசுமாட்டுச் சாணம் 10 கிலோ, நாட்டுப் பசு மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், ஏதேனும் ஒரு பயறு மாவு ஒரு கிலோ, நாட்டுச் சர்க்கரை 2 கிலோ, உயிர் உள்ள மண் ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இட்டு… 200 லிட்டர் தண்ணீர் ஊற்றி, இரண்டு நாட்கள் வைக்க வேண்டும். இக்கரைசலை காலை, மதியம், மாலை என  மூன்று வேளைகளும் கடிகாரச்  சுற்றுப்படி கலக்கிவிட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார்.

 

Thanks to pasumai vikatan

About admin

Check Also

ஜீராபூல்… மீட்டெடுக்கப்பட்ட பாரம்பர்ய நெல் ரகம்!

நமது மாநிலத்துக்கென பிரத்யேக பாரம்பர்ய நெல் ரகங்கள் இருப்பதுபோலவே, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மண் வளம், தட்ப வெப்ப நிலை ஆகிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *